சிங்கப்பூரில் $400,000 மோசடி இரு மலேசியர்கள் கைது!
சிங்கப்பூரில் ஒரு பெண்ணிடம் அரசு அதிகாரிகளாக நடித்துத் தன்னை நம்ப வைத்து, 4 இலட்சம் டாலருக்கு மேல் மோசடி செய்ததாக இரு மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 மற்றும் 38 வயதான இவர்கள், முதலில் ஒரு வங்கியிலிருந்து அழைப்பு வந்தது போல பெண்ணிடம் தொடர்பு கொண்டு, அவளின் பெயரில் கடன் அட்டை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் அந்த அழைப்பு, சட்ட அமைச்சகம் மற்றும் நாணய ஆணையத்தின் அதிகாரிகள் எனத் தங்களை அறிமுகப்படுத்திய போலி நபர்களிடம் மாற்றப்பட்டது. அவர்கள், “நீங்கள் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளீர்கள்” என மிரட்டினர்.
நம்ப வைக்க, அவர்கள் போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை WhatsApp மூலம் அனுப்பினர். அதன் பிறகு, “உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி முஸ்தபா சென்டரில் $412,000 மதிப்பிலான தங்கத்தை வாங்கி, அதை ஒரு நபரிடம் கொடுக்க வேண்டும்” என கூறினர். பெண் அவர்களது சொல்படி செய்தபின் ஏமாந்ததை உணர்ந்து, போலீசில் புகார் செய்தார். விசாரணையின் போது, 38 வயது நபர் நவம்பர் 8 அன்று சிங்கப்பூரில் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அதே நாளில், இதே மாதிரியான மோசடியில் ஈடுபட்ட 22 வயது நபரும் பிடிக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில், இருவரும் வெளிநாட்டு மோசடி குழுவிற்கு பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்களை சேகரிக்க உதவியதாக தெரியவந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், $500,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம். பொதுமக்கள் தெரியாத நபர்களிடம் பணம் அனுப்பவோ, வங்கி விவரங்களை பகிரவோ கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகள் ஒருபோதும் தொலைபேசியில் பணம் கேட்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தனர். சந்தேகம் இருந்தால் 1799 என்ற ScamShield உதவி எண்ணையோ அல்லது போலீஸ் ஹாட்லைன் 1800-255-0000 என்ற எண்ணையோ அழைக்கலாம்.