சிங்கப்பூரில் சோதனைச் சாவடியில் சட்டவிரோத புகையிலை சிகரெட்டுகளுடன்16 வயது சிறுவன் கைது!
சிங்கப்பூரில், கடந்த 25-ம் தேதி அதிகாலை 2.55 மணியளவில் கையிலெமார்ட் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஹெல்மெட் அணியாமல் மின்சார பைக்கில் வந்த 16 வயது சிறுவன், போலீசாரைப் பார்த்ததும், திடீரென வேகமாகச் சென்று, சாலை தடுப்பில் மோதி, மின்சார பைக்கில் இருந்து கீழே விழுந்தான். பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்றான். ஆனால், போலீசார் அவனை துரத்திப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அச்சிறுவனிடம் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவன் ஓட்டி வந்த மின்சார பைக் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த மின்சார பைக்கை நிலப் போக்குவரத்து ஆணையம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சாலைத் தடுப்பை மீறுவதற்கு 10,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், மின்சார பைக்கை சட்டவிரோதமாக மாற்றியமைத்ததற்கு 20,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இது தவிர, சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்கு, ஏய்ப்பு செய்யப்பட்ட வரியைப் போல 40 மடங்கு வரை அபராதம் அல்லது 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.