திருப்பூரில் தனியார் பேருந்து விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியை முந்த முயன்றபோது, பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, சாலைப்புறம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கும் பெரியசாமி (19) மற்றும் ஹரி கிருஷ்ணன் (19) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊமச்சி வலசு பகுதியைச் சேர்ந்த குருராஜ் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 30க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குப் பிறகு, ஊத்துக்குளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். கிரேன் மூலம் பேருந்தை மீட்டனர்.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி. யாதவ் கிரிஸ் அசோக் சம்பவ இடத்தை பார்வையிட்டு, அதிவேகமாக ஓடும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
உடனடியாக ரத்தத் தேவை இருந்ததால், வாலிபர் சங்கத்தினர் ரத்ததானம் செய்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை திருப்பூர் வருவாய் அதிகாரிகள், ஊத்துக்குளி வட்டாட்சியர் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.