சிங்கப்பூரில் போலி தங்க கட்டிகளை கொண்டு மோசடி மூன்று பேர் கைது!
சிங்கப்பூரில், போலி தங்க கட்டிகளை காட்டி ஒரு பெண்ணிடம் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலர் (S$4,000) மோசடி செய்த மூன்று நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
Tras Street பகுதியில் அந்த பெண்ணை அணுகிய இருவர், தோண்டி எடுக்கப்பட்ட தங்க கட்டிகளை சீனாவுக்கு அனுப்ப உதவி தேவை என்று கூறினர். அந்த தங்க கட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க, அவற்றிற்கு ஈடாக பணத்தை தரும்படி அவர்கள் பெண்ணிடம் கேட்டனர்.
உண்மையான தங்க கட்டியையும், பழைய சீன காகிதத்தையும் காட்டி அவளை நம்ப வைத்தனர். அந்த சிறிய தங்க கட்டியை கடைக்கு கொண்டு போய் பரிசோதித்த பின்னர், 4,000 சிங்கப்பூர் டாலர் கொடுக்க பெண் ஒப்புக்கொண்டார். ஆனால், பின்னர் மற்ற தங்க கட்டிகளை கடையில் சோதித்து பார்த்த போது, அவை போலி என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
காவல்துறை இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்தது மட்டுமல்லாமல், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்த மற்றொரு நபரையும் கைது செய்தது. 80க்கும் மேற்பட்ட போலி தங்க கட்டிகள், சீன எழுத்துக்கள் கொண்ட ஒரு தாள் மற்றும் ஆறு தங்க சிலைகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. 52 முதல் 62 வயது வரையிலான இந்த மூன்று நபர்களும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் , அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.