நெல் வயலில் விழுந்த விமானம் – உயிரிழந்த அமெரிக்க வீரர்கள்!
ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்த விமானம் பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு அமெரிக்க இராணுவ உறுப்பினரும் மூன்று பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களும் உயிரிழந்துள்ளனர். விமானம் பிலிப்பைன்ஸ் அரசின் வேண்டுகோளின் பேரில் உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு பணிகளைச் செய்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, இதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இந்த விபத்தை உறுதிப்படுத்தியபோதும், கூடுதல் தகவல்களை உடனடியாக வழங்கவில்லை.
விபத்து நடந்த இடமான அம்பட்டுவான் நகரில், இடிபாடுகளுக்குள் இருந்து நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த விபத்தில் அருகிலுள்ள பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், விமானம் தரையில்விழுந்தபோது ஒரு எருமை உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
பிலிப்பைன்ஸ் அரசுக்கு உதவ அமெரிக்க இராணுவம் பல வருடங்களாக நாட்டின் தெற்கு பகுதியில் தனது படைகளை அனுப்பிவைத்துள்ளது, இங்கு அவர்கள் பிலிப்பைன்ஸ் படைகளை பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கிவருகின்றனர்.