மெக்சிகோ திருவிழாவில் எரியும் வெப்ப காற்று பலூனிலிருந்து இருவரைக் காப்பாற்றிய நபர், பின்னர் விழுந்து மாண்டார்.
மெக்சிகோவின் ஜகாடெகாஸ் நகரில் நடைபெற்ற காற்றோட்ட பலூன் விழாவில், பொதுமக்களையும் விழாவிலும் பங்கேற்றவர்களையும் நெகிழ வைத்த சோகமான சம்பவம் நடந்தது. 40 வயதான லூயிசியோ என்ற நபர், திடீரென தீ பிடித்த ஹாட் ஏர் பலூனில் சிக்கியிருந்த இரண்டு பயணிகளை வீரமாக காப்பாற்றினார். இந்த சம்பவம், என்ரிக் எஸ்ட்ராடா 2025 கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
பலூன் தரையில் தீப்பிடித்த போதே லூயிசியோ தைரியமாக களத்தில் இறங்கி பயணிகளை வெளியே அழைத்துவந்தார். ஆனால் மீட்பு முயற்சியின் போது, பலூனின் ஒரு கயிற்றில் சிக்கிக்கொண்ட அவர், பலூன் காற்றில் பறந்தபோது அதில் தொங்கியபடி மேலே சென்றார். தீப்பிழம்புகள் மற்றும் புகையுடன் கூடிய பலூன் மேலே சென்ற நிலையில், அவர் கயிற்றை விட்டு விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
லூயிசியோவின் துணிச்சலான செயல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அவரது செயலால் உயிர் தப்பிய இரண்டு பயணிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவரது உயிர் தியாகம், மக்களின் மனதில் நீங்காத நினைவாகவும், உண்மையான ஹீரோவாகவும் பதியப்பட்டுள்ளது.