டென்வரில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை மதியம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA3023-ல் பயணித்தவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தருணம் ஏற்பட்டது.
மியாமிக்குச் செல்ல இருந்த இந்த விமானம் ஓடுபாதையில் இருந்தபோது, அதன் முக்கிய தரையிறங்கும் சக்கரங்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது. மதியம் 1.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததால், விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, உள்ளிருந்த 173 பயணிகளும் 6 பணியாளர்களும் அவசரகால ஸ்லைடுகளைப் பயன்படுத்தி வெளியேற்றப்பட்டனர்.
வெளியேற்றம் பரபரப்பாக இருந்தது சிலர் ஸ்லைடில் வழுக்கி விழுந்தனர், ஒரு பயணி குழந்தையுடன் கீழே விழுந்து லேசான காயமடைந்தார். மொத்தம் ஐந்து பேர் பரிசோதிக்கப்பட்டபோதிலும், ஒருவர் மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மீதமுள்ளவர்கள் பஸ்களில் விமான நிலைய முனையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், பயணிகள் தீக்காயமடைந்த சக்கரத்திலிருந்து புகை எழும் நேரத்தில் விமானத்திலிருந்து தப்பிப்பதை காணலாம்.
அதிகாரிகள் இந்த தீ விபத்து, தரையிறங்கும் கியரில் அல்லது டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இது பராமரிப்பு தொடர்பான டயர் பிரச்சனை என விளக்கியுள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் டென்வரில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதற்குப் பின்னர், நடவடிக்கைகள் வழக்கமான நிலைக்கு வந்தன. அதிர்ஷ்டவசமாக, இவ்விபத்தில் யாருக்கும் தீவிர காயம் ஏற்படவில்லை.