வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கருவிகளுடன் நான்கு வெளிநாட்டு ஆடவர்கள் கைது!
ஆகஸ்ட் 8 ஆம் தேதி புக்கிட் திமாவில், வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கும்பல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் நான்கு சீனர்கள் கைது செய்யப்பட்டனர்.
36 முதல் 41 வயதுக்குட்பட்ட இந்த நபர்களிடமிருந்து, வீடுகளை உடைக்க பயன்படுத்தக்கூடிய கருவிகளான முகமூடிகள், வளைந்த ஸ்க்ரூடிரைவர்கள், கையுறைகள், ரென்ச்கள் மற்றும் டார்ச்லைட் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இவர்கள் வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கருவிகளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்தக் கும்பல் ‘ரயில் பாதை’ அருகே சந்தேகப்படும்படியாகச் சுற்றித் திரிந்துள்ளது. அவர்களை நெருங்கியபோது, காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளனர். இரண்டு பேர் இரண்டு மணி நேரத்திற்குள்ளும், ஒருவர் பின்னர் கிளிமெண்டி மாலிலும், கடைசி நபர் அடுத்த நாள் காலை கெய்லாங் ஹோட்டலிலும் கைது செய்யப்பட்டனர்.
ரொக்கப் பணம் மற்றும் பிற பொருட்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நான்கு பேரும் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சமூக வருகை அனுமதிச்சீட்டில் சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் மூவருக்கு இது முதல் வருகை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நடந்த மற்ற வீட்டு கொள்ளைச் சம்பவங்களுக்கும், குறிப்பாக 60,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவங்களுக்கும் இந்த நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் பிணையில் வெளிவர முடியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது வழக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.