பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பேருந்தில்தீ விபத்து 40 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்!

0

சிங்கப்பூரில், அக்டோபர் 5 ஆம் தேதி SMRT நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று துவாஸ் திசையை நோக்கி பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE) சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் இன்ஜின் பகுதியில் தீப்பற்றியது.

உடனடியாக ஓட்டுநர், பேருந்தைச் சாலையோரம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். இதனால், பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம், ஈஸ்ட் கோஸ்ட் பார்க் வெளியேறும் வழியைக் கடந்த பிறகு, இரவு சுமார் 10.30 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

மீட்புப் படையினர் வருவதற்கு முன்பாகவே, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தீயணைக்கும் கருவியின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

இதையடுத்து, பயணிகளை ஏற்றிச் செல்ல மாற்றுப் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சேதமடைந்த பேருந்து, பழுதுபார்க்கும் பணிமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக SMRT நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய பேருந்து, புவாங்கோக் பேருந்து நிலையம் மற்றும் சாங்கி விமான நிலையத்திற்கு இடையே இயங்கும் 110 ஆம் இலக்கப் பேருந்து ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.