சிங்கப்பூர் கட்டுமான தளத்தில் கிரேன் பாகம் விழுந்ததில் 37 வயது தொழிலாளி படுகாயம்!
சிங்கப்பூரில் உள்ள சின் மிங் ரெசிடென்சஸ் (Sin Ming Residences) அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் இடத்தில், அக்டோபர் 10 ஆம் தேதி மாலை கிரேன் பாகம் ஒன்று உடைந்து விழுந்ததில் 37 வயது கட்டுமானத் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.
இந்தச் சோகமான சம்பவம், மாலை சுமார் 5.25 மணியளவில் 28 சின் மிங் தெருவில் நடந்துள்ளது. காயமடைந்த தொழிலாளி உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மனிதவள அமைச்சின் (MOM) தகவல்படி, ஒரு பெரிய நடமாடும் கிரேனைப் பாகம் பாகமாகப் பிரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அப்போது, கிரேனின் நீண்ட தூக்கும் பகுதி (boom) திடீரென உடைந்து, அதன் ஒரு பாகம் (jib) தரையில் விழுந்துள்ளது. அந்தப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த தொழிலாளியின் மீது அது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளி, மோ செங் கிரேன்ஸ் (Moh Seng Cranes) நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த கட்டுமானப் பணிகளை குவான் யோங் கன்ஸ்ட்ரக்ஷன் (Kwan Yong Construction) நிறுவனம் நிர்வகித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பே முக்கியம் என அதிகாரிகள் அறிவுறுத்தல்
இது குறித்து (HDB) கூறுகையில், காயமடைந்த தொழிலாளியின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் ஒப்பந்தக்காரருடன் இணைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மேலும், “பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பே எங்களின் முதன்மையான நோக்கம். இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்றும் அது குறிப்பிட்டது.
மனிதவள அமைச்சு அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு முக்கிய நினைவூட்டலை வழங்கியுள்ளது. கிரேன்களை இயக்கும்போதும், பிரிக்கும்போதும் பாதுகாப்பு விதிமுறைகளை மிகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற ஆபத்தான பணிகள் நடக்கும்போது, மற்ற தொழிலாளர்களை அந்தப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.