தவறான தகவலைப் பரப்புவதில் பங்கு வகித்ததற்காக 27 வயதுடைய பெண் ஒருவர் மீது அவதூறு வழக்கு!
2022-ம் ஆண்டு, சிங்கப்பூர் KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் (A&E) கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறிய ஒரு கர்ப்பிணிப் பெண் பற்றிய பொய்யான தகவல்களை இணையத்தில் பரப்பியதில், 27 வயது பெண் ஒருவர் மீது மே 6-ம் தேதி அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை இறந்துவிட்டதாக இருக்கலாம் – KK மருத்துவமனையில் தனது கருச்சிதைவு குறித்த துயரமான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் ஒரு பெண் என்ற தலைப்பில், Wake Up, Singapore (WUSG) தளங்களில் இந்த தவறான செய்தி வெளியிடப்பட்டது. இந்தப் பிரச்சினையை KKH மருத்துவமனை, மார்ச் 25, 2022 அன்று காவல்துறையில் புகார் அளித்தது.
WUSG-க்கு நிர்வாகியாக இருந்ததாகக் கூறப்படும் 26 வயதான அரிஃபின் இஸ்கந்தர் ஷா அலி அக்பர் மீதும் ஏப்ரல் 24, 2024 அன்று அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவர் மே 24 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். நடத்தப்பட்ட விசாரணையில் அந்தச் செய்தியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததாகவும் அவர் கருச்சிதைவை சந்திக்கவில்லை என்றும் KKH மருத்துவமனை தெளிவுபடுத்தியது. பின்னர், அந்தப் பெண் KKH மருத்துவமனையில் தான் கருச்சிதைவு செய்ததாக WUSG-இன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொய்யான செய்தியை அனுப்பியதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, WUSGக்கு ஒரு திருத்த அறிக்கையை வெளியிடுமாறு சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், ‘இணைய வழி பொய்கள் மற்றும் தவறான செய்திகளில் இருந்து பாதுகாப்பு அலுவலகம்’ (Protection from Online Falsehoods and Manipulation Act Office )-க்கு மார்ச் 2022 அன்று உத்தரவிட்டது.
அதன்படி WUSG தங்கள் சமூக ஊடக கணக்குகளில் திருத்த அறிக்கைகளையும் மன்னிப்பையும் வெளியிட்டது. அவதூறு பரப்புதல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.