Yishunல் பெரும் சோகம் சத்தம் தொடர்பான சண்டையில் பெண் கத்தியால் குத்திக் கொலை!
இன்று (செப். 24) புதன்கிழமை காலை ஈஷூன் சென்ட்ரல் பகுதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 31 வயதான வியட்நாம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்த முதியவர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டைக்கு என்ன காரணம்?
இந்தச் சம்பவம் பிளாக் 323-ல் காலை சுமார் 7:25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. போலீஸார் அங்கு சென்றபோது, ஆறாவது மாடியின் வராந்தாவில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் காயங்களுடன் கிடப்பதைக் கண்டனர். விசாரணையில், நீண்ட நாட்களாக இருந்து வந்த சத்தம் தொடர்பான தகராறில் சண்டை முற்றியதாகவும், அப்போது சந்தேக நபர் அந்தத் தம்பதியினரைக் கத்தியால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகளின் பெற்றோரான இந்தத் தம்பதியினர், தங்கள் வீட்டிலிருந்து வரும் சத்தம் குறித்து ஐந்தாவது மாடியில் வசிக்கும் அந்த நபருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
சம்பவத்தின்போது உரத்த அலறல் சத்தம் கேட்டதாகவும், பின்னர் லிஃப்ட் அருகே அந்தப் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தைச் சுற்றி போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும், அப்பகுதியில் இரத்தக் கறைகளும் காணப்பட்டன. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.