சிங்கப்பூரில் ஆன்மீகத் தலைவர் என போலியாக நடித்த பெண், கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டார்.

0

சிங்கப்பூரில், தன்னை ஒரு ஆன்மீக குரு என்று காட்டிக்கொண்ட வூ மே ஹோ (Woo May Hoe) என்ற பெண், தன் பக்தர்களிடம் இருந்து 7 மில்லியன் (சுமார் 50 கோடி ரூபாய்) டாலர்களுக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவர்கள் வங்கிகளில் 6.6 மில்லியன் (கிட்டத்தட்ட 47 கோடி ரூபாய்) டாலர்கள் கடன் வாங்குமாறும் ஏமாற்றியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒரு ஆன்மீக அமைப்புக்கு இப்பணம் செல்லும் எனக்கூறி ஏமாற்றிய, 53 வயதான வூ மே ஹோ, சுமார் 30 பக்தர்களை வைத்திருந்தார். எனினும், அந்தப் பணத்தை தனது சொந்த செலவுகளுக்காக அவர் பயன்படுத்தியது பின்னர் தெரியவந்தது.

தங்கள் விதியை மாற்ற பணம் தர வேண்டும் என்று தன் பக்தர்களை நம்ப வைத்த வூ, சிலரை மனிதக் கழிவை உண்ணும்படி வற்புறுத்தியது உட்பட, மிகக் கொடூரமான தண்டனைகளை அளித்துள்ளார். தீராத நோய்களால் அவதியுற்ற பலர், நம்பிக்கையுடன் இவரை நாடினர்.

அவர்களது பலவீனத்தைச் சுரண்டிய வூ, தனது சொகுசு வாழ்க்கைக்காக அவர்களது பணத்தை விரயம் செய்தார். தங்களை எதிர்ப்பவர்களை மிரட்டி, விலை உயர்ந்த பொருட்களை விற்கவைத்தும், பெரிய அளவில் கடன் வாங்க வைத்தும் பணம் பறித்துள்ளார்.

தனது பக்தர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை தன்னுடன் குடியிருந்து, முழுநேரமாக தன்னை கவனித்துக்கொள்ளுமாறு வற்புறுத்திய வூ, அவர்களை வேலையை விடச் செய்தார். அவரது கொடுமைக்கு ஆளான ஒரு பக்தர், கண் பார்வை இழக்கும் அளவுக்கு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

வூ மே ஹோவுக்கு மனநோய் இருப்பதாகவும், அவருடைய வன்முறைக்கு இது ஒரு காரணம் என்றாலும், அவர் செய்த மோசடிச் செயலில் இதற்கு தொடர்பில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வூ மே ஹோவுக்கு இறுதி தண்டனை ஜூன் மாதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.