சிங்கப்பூரில் பெரிய அளவிலான மோசடி எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

0

சிங்கப்பூரில், சுமார் 28 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களை ஏமாற்றிப் பறித்த குற்றத்திற்காக, 47 வயதான முரளிதரன் முஹுந்தனுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை நடந்த இந்த மோசடிகளில் 18 குற்றச்சாட்டுகளுக்கு முரளிதரன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஏற்கனவே இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, போலி கட்டணங்கள் மூலம் 57 முதல் 77 வயதுடைய ஆறு பேரை ஏமாற்றியுள்ளார்.

“கோல்ட் கிரவுன் டைம்ஷேர்” என்ற முதலீட்டுத் திட்டத்தில் தன் பணத்தை இழந்த 77 வயது ஓய்வுபெற்ற பெண்மணியிடம் தான் ஆரம்பத்தில் மோசடி செய்துள்ளார். அப்போது ஒரு கடன் வசூல் நிறுவனத்தில் வேலை செய்து வந்த, முரளிதரன், முதலீடுகளில் இழந்த பணத்தை மீட்டுத் தர விரும்பியவர்களைச் சந்தித்தார்.

அவர்களது பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை அறிந்தும், சொந்தக் கடன்களை அடைப்பதற்காக, ஏமாற்றுத்தனத்தில் இறங்கியுள்ளார்.

“டேரன்” என்ற போலிப் பெயரில், முரளிதரன் அந்த பெண்மணியிடம், “ஒரு நிறுவனம் உங்கள் முதலீட்டுப் பணத்தில் பெரும்பகுதியை மீட்டுள்ளது, அதைப் பெற்றுத் தர 30,000 டாலர் கட்டணம் தேவை” என்று பொய் சொன்னார். ஏமாந்த அந்தப் பெண் அந்தத் தொகையை இழந்து, மேலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் டாலர்களை முரளிதரனிடம் பறிகொடுத்தார்.

பெண்மணியின் மகன் 2021 ஜனவரியில் போலீசில் புகார் அளித்தார். பணியிலிருந்து விலகிய முரளிதரன், வேறொரு நிறுவனத்தில் மோசடியைத் தொடர்ந்தார்.

இறுதியில், 2022 மே மாதம் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மோசடி குற்றம் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.