சக்கர நாற்காலி உதவி மறுக்கப்பட்டதால் முதியவர் உயிரிழப்பு ஏர் இந்தியாவுக்கு அபராதம்!
அமெரிக்காவிலிருந்து மும்பை வந்த 80 வயது முதியவருக்கு விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வசதி மறுக்கப்பட்டதால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார். இதற்காக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
முதியவர் தம்பதியினர் பிப்ரவரி 12ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து மும்பை வந்தடைந்தனர். அவர்கள் விமான டிக்கெட் முன்பதிவின்போதே சக்கர நாற்காலி உதவி கோரியிருந்தனர். ஆனால், போதிய சக்கர நாற்காலிகள் இல்லாத நிலையில், அவரது மனைவிக்கு மட்டுமே அந்த வசதி வழங்கப்பட்டது.
தன் மனைவியை விட்டுப் பிரிய விரும்பாத அந்த முதியவர், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தை உதவியின்றி நடந்தே கடக்க முயற்சித்தார். இதில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார், பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஏர் இந்தியா நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என DGCA உத்தரவிட்டுள்ளது.