சிங்கப்பூரில் பஸ் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஐந்து பேர் காயம்!

0

சிங்கப்பூரின் சிம் லிம் டவரருக்கு அருகில் ஜூன் 6ஆம் தேதி டவர் டிரான்சிட் நிறுவனப் பஸ் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 93 வயது முதியவர் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஜாலான் பெசார் மற்றும் ஓஃபீர் சாலை சந்திப்பில் பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. காயமடைந்த ஐந்து பேரும் உடனடியாக ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 39 முதல் 93 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அதிர்ஷ்டவசமாக, அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் ஓஃபீர் சாலையின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டது. விபத்தில் சிக்கிய பேருந்து 857 என்ற எண்ணைக் கொண்டிருந்தது. இதனால் 980 மற்றும் 857 என்ற எண் கொண்ட பிற பேருந்துகளின் சேவையும் பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்த 17 நொடிகள் கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், பேருந்து லாரியில் இருந்த இரும்பு கம்பிகளில் மோதி சேதமடைந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கியும், பேருந்தின் ஒரு பக்கம் பெரும் சேதமடைந்தும் காணப்படுகிறது. மேலும், விபத்து நடந்த சாலையில் லாரியும் அதிலிருந்து கீழே விழுந்த இரும்பு கம்பிகளும் போக்குவரத்தை பெரிதும் பாதித்தன.

பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு உதவி வருவதாகவும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் டவர் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.