அநாகரிக புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டல் சிங்கப்பூரில் 12பேர் மீது விசாரணை!

0

சிங்கப்பூரில் அண்மையில் வெளியான பாலியல் ரீதியிலான புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தி மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்ட சம்பவத்தில் பன்னிருவர் மீது பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மே 1ம் திகதிஅன்று பொலிசாரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்த 12பேர்களில் ஏழு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர். அவர்களின் வயது 18 முதல் 46 வரை.

குற்றச் செயல்களுக்காக வங்கிக் கணக்குகளை உருவாக்குதல், அங்கீகாரமற்ற முறையில் சிங்கப்பூர் அரசாங்க இணைய சேவைகளை அணுகுதல், சட்டத்திற்கு மாறாக சிம் கார்டுகளை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மோசடி கும்பல்களுக்கு இவர்கள் உதவியதாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் இந்த 12பேர் பணம் பெற்றதாகவோ அல்லது அவர்களுக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவோ தெரியவந்துள்ளது.

இரண்டு வார நடவடிக்கையில், பொலிசார் குறைந்தது S$115,000 (US$84,000) மதிப்பிலான சந்தேகத்திற்குரிய குற்றப் பணத்தை மீட்டுள்ளனர், அவற்றில் சில பிற மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. மேலும், சில மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

23 வயது பெண் ஒருவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். கணினிகளை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு எதிராக உள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.