துபாயில் காதலியைக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
துபாயில் வசித்து வந்த தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்த ஆசிய ஆணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிந்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலைக்குப் பின்னர், அவர் உடலை ஒரு பெரிய சூட்கேசில் மறைத்து குடியிருப்புக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் வீச முயற்சித்துள்ளார். உடலை அப்புறப்படுத்த முயற்சிக்கும் முன், ஒரு நாள் முழுவதும் அதை தனது படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்தார். இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
2022 ஜனவரியில் சர்வதேச நகரில் (International City) நடந்த இந்தச் சம்பவம், கட்டிடக் காவலாளி ஒருவர் குப்பைத்தொட்டி அருகே பெரிய சூட்கேசில் உடல் இருப்பதை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
முதலில் சூட்கேசில் இருந்த ஒரு காலை பொம்மைக்கால் என்று நினைத்த காவலாளி, பின்னர் அது ஒரு பெண்ணின் உடல் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
விசாரணையின்போது அந்தக் கட்டிடத்திற்கு ஒரு இளம் ஆசிய ஆணின் வீட்டிற்கு அந்தப் பெண் அடிக்கடி வருவதை காவலாளி அடையாளம் காட்டினார். சந்தேக நபரின் குடியிருப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் கொலையின் தடயங்கள் கிடைத்ததையடுத்து, ஜெபல் அலி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், தான் நைட் கிளப் ஒன்றில் சந்தித்த அந்தப் பெண்ணுடன் முதலில் நண்பராக பழகி, பின்னர் அது காதலாக மாறியதை ஒப்புக்கொண்டார். தங்கள் உறவை முறைப்படுத்த வேண்டும் என்பதில் ஏற்பட்ட மோதல் தான் பெண்ணின் மரணத்தில் முடிந்தது.
அவர் அந்தப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அவள் உடமைகளை அப்புறப்படுத்த தனது மூன்று நண்பர்களின் உதவியைப் பெற்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். அந்த மூன்று நண்பர்களுக்கும் குற்றத்தை மறைத்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.