எவரெஸ்ட் சிகரத்தை 29-வது முறையாக வென்று சாதனை படைத்த நேபாளி!

0

நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் காமி ரித்தா ஷெர்பா, உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டை 29-வது முறையாக அடைந்துள்ளார்! இதுவரை இல்லாத புதிய சாதனை இது.

1994-ம் ஆண்டு முதல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரும் இவர், இந்த முறை Allele Seven Summit Treks என்ற குழுவினருடன் இணைந்து சாதனை படைத்துள்ளார்.

“எவரெஸ்ட் மனிதன்” என்றே அழைக்கப்படும் காமி ரித்தா ஷெர்பா, பாகிஸ்தானின் K2 சிகரம் உட்பட உலகின் பல உயர்ந்த சிகரங்களையும் வென்றுள்ளார். “நான் இதுவரை சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலை ஏறியதில்லை. எனது வேலையைச் செய்வதற்காக மட்டுமே ஏறினேன்” என்று அவர் பணிவுடன் கூறியுள்ளார்.

இந்த வசந்த காலத்தில், நேபாள அரசு 414 மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைய அனுமதி அளித்துள்ளது. சீனாவும் தனது பகுதியில் இருந்து 2020-க்குப் பிறகு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைய வழி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வானிலை சீராகவும், காற்றின் வேகம் குறைவாகவும் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட்டை அடைய முயற்சி செய்கிறார்கள். 1953-ம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரி மற்றும் இந்திய வீரர் டென்சிங் நோர்கே முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததில் இருந்து, மலையேற்றத் துறை பெருமளவில் வளர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 600-க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் எவரெஸ்டை அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் 18 பேர் உயிரிழந்தது வேதனையான விடயம்.

Leave A Reply

Your email address will not be published.