ஆடம்பரப் பொருள் ஆசையில் கோடிகளை இழந்த மக்கள்! சிங்கப்பூர் தம்பதிக்கு சிறை!

0

தனது தாய்லாந்து மனைவியுடன் சேர்ந்து மக்களை ஏமாற்றிப் பணம் பறித்த குற்றத்திற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த 30 வயதான பி ஜியாபெங் என்பவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் கைப்பைகளை விற்பனை செய்வதாகக் கூறி, இந்தத் தம்பதி மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து, பொருட்களைக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.

இந்த மோசடித் திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்ட அவரது மனைவி பன்சுக் சிரிவிபாவிற்கு, ஏற்கனவே 2024-ல் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, இந்தத் தம்பதியினரின் ‘டிரேட்நேஷன்’ மற்றும் ‘டிரேட்லக்ஸரி’ என்ற நிறுவனங்கள் மூலம் ஆடம்பரப் பொருட்களை வாங்க நினைத்த மக்கள், அதற்கான முழுப் பணத்தையும் செலுத்தியுள்ளனர். ஆனால், யாருக்கும் அவர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வந்து சேரவில்லை.

ஏற்கனவே வியாபாரத்தில் பணப் பிரச்சினை இருந்தபோதும், இந்தத் தம்பதி புதிய வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து பணத்தை வாங்கிக் குவித்துள்ளனர்.

அந்தப் பணத்தைக் கொண்டு, சொகுசு கார்கள் வாங்குவது, பாங்காக்கில் ஒரு பெரிய வீடு வாங்குவது என மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 187 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், மேலும் மக்கள் இழந்த பணத்தின் மதிப்பு பல கோடிகளைத் தொட்டது.

போலீஸ் விசாரணை தொடங்கியதும், கைதாவதிலிருந்து தப்பிக்க பி மற்றும் பன்சுக் இருவரும் ஒரு லாரியில் ஒளிந்து சிங்கப்பூரிலிருந்து தப்பி ஓடினர். பின்னர், 2022 ஆகஸ்ட் மாதம் மலேசியாவின் ஜொகூர் பாருவில் வைத்துப் பிடிக்கப்பட்டு, மீண்டும் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இந்த மோசடியில் அவரது மனைவிக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், பி ஜியாபெங் அவருக்கு முழுமையாக உதவி செய்துள்ளார் என்றும், அந்த மோசடிப் பணத்தில் அவரும் பயனடைந்துள்ளார் என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. பாதிக்கப்பட்ட மக்களில் யாருக்கும் அவர் பணத்தைத் திருப்பித் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.