சிங்கப்பூர் சுங்கத் துறை சட்டவிரோத சிகரெட் கடத்தலை ஒடுக்கியது!

0

சிங்கப்பூர் சுங்கத் துறை ஏப்ரல் 23 ஆம் தேதி சுங்கை கடூவில் நடத்திய திடீர் சோதனையில் நான்கு பேரைக் கைது செய்து, 2,952 அட்டைப் பெட்டிகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சிகரெட்டுகளைக் கைப்பற்றியது. தப்பிக்கப்பட்ட வரித்தொகை ஏறக்குறைய $319,914 என ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையின் போது, பெட்ரோல் நிரப்பும் டேங்கரைச் சுமந்துகொண்டு சுங்கை கடூ தெரு 1-இல் உள்ள தொழிற்பேட்டைக்குள் ஒரு லாரி நுழைவதைக் கண்காணிப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

சற்று நேரத்திலேயே அந்த லாரி ஓட்டுநர் இடத்தைவிட்டு நகர்ந்தார். அருகில் நின்ற வேனுக்கு கறுப்பு பைகளை இருவர் மாற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் சோதனை செய்ததில், லாரியின் டேங்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வரி விதிக்கப்படாத சிகரெட்டுகள் அம்பலமாயின.

இச்செயலில் ஈடுபட்ட 23 மற்றும் 29 வயதுடைய இரு சிங்கப்பூரர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 39 வயதுடைய மலேசிய லாரி ஓட்டுநரும், கண்காணிப்பு பணியில் இருந்த 23 வயதுடைய மற்றொரு சிங்கப்பூரரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் லாரி மற்றும் டேங்கரை ஓட்டுநர் மலேசியாவிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும், சிகரெட்டுகளை வேனுக்கு மாற்றிக் கொண்டு சென்ற இருவரும், சமூக ஊடக செயலி மூலம் அடையாளம் தெரியாத நபரால் பணியமர்த்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூர் சுங்கத்துறை வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சிகரெட்டுகள், வேன், லாரி மற்றும் டேங்கரைக் கைப்பற்றியது. வரி செலுத்தப்படாத பொருட்களைக் கையாள்வது சிங்கப்பூரில் கடுமையான குற்றம்.

இத்தகைய குற்றங்களுக்கு பெரும் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் சேர்ந்தும் தண்டனையாகப் பெற நேரிடலாம். மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று சிங்கப்பூர் சுங்கத் துறை எச்சரித்துள்ளது.

கடத்தல் அல்லது வரி ஏய்ப்பு பற்றிய தகவல்களை வைத்திருக்கும் குடிமக்கள் https://go.gov.sg/reportcustomsoffence என்ற இணைய முகவரியின் மூலம் சிங்கப்பூர் சுங்கத் துறைக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.