சிங்கப்பூரின் மின்சாரம் மேலும் வலுப்பெறுகிறது!
சிங்கப்பூரின் மின்சார வாரியம் (EMA) அறிவித்துள்ளபடி, இரண்டு புதிய 100 மெகாவாட் திறன் கொண்ட விரைவு-தொடக்க மின் உற்பத்தி நிலையங்கள் இணைகின்றன.
பசிபிக் லைட் பவர் (PLP) நிறுவனத்தால் உருவாக்கப்படும் இந்த மின்னாக்கிகள், மின்சாரத் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே விரைவான சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துகின்றன.
இவை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும்.
மின்சார அமைப்பில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கையாள்வதற்காக, 2023 டிசம்பரில், மின்சாரச் சந்தை நிறுவனம் (EMC) ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
இதன் தொடர்ச்சியாகவே இந்த மின்னாக்கிகள் இணைக்கப்படுகின்றன. தொழில்நுட்பக் கோளாறுகள், புதிய மின் உற்பத்தி அலகுகளின் அறிமுகம், மாற்று எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்யும்போது இத்தகைய இடையூறுகள் ஏற்படலாம்.
தடையின்றி மின்சாரம் கிடைக்க, விரைவாகச் செயல்படக்கூடிய இந்த மின்னாக்கிகள் பெரிதும் உதவும்.
மின்சார விநியோகத்திற்கும், தேவைக்கும் இடையே தொடர்ந்து சமநிலையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை மின்சார வாரியம் வலியுறுத்தியுள்ளது.
சிங்கப்பூர் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறும்போது, இத்தகைய உபரி மின் உற்பத்தி ஆற்றல் மிகவும் முக்கியமானது என்று EMA தலைமை நிர்வாக அதிகாரி நிஜாம் ஷி சன் குறிப்பிட்டார்.
பசிபிக் லைட் பவர் நிறுவனத்தின் புதிய விரைவு-தொடக்க மின்னாக்கிகள், ஹைட்ரஜன்-தயார் நிலையில் உருவாக்கப்பட்டுள்ளதால் மாற்று எரிபொருள் வாய்ப்பையும் வழங்குகின்றன.
இதனால் சிங்கப்பூரின் மின்சார அமைப்பிற்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பும் கூடுதலாகும்.