சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளை மேம்படுத்த ST இன்ஜினியரிங் S$175 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரின் பொதுப் பேருந்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து (LTA) 175 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது ST Engineering நிறுவனத்தின் நகர்ப்புற தீர்வுகள் பிரிவு.
பேருந்துகளின் செயல்பாட்டைக் கண்காணித்தல், கட்டணம் வசூலிக்கும் முறை மற்றும் மின்சார வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டம் இதில் அடங்கும்.
சுமார் 5,800 பேருந்துகளுக்கு இந்த மேம்பாடுகள் செய்யப்பட உள்ளன. 2024 ஆம் ஆண்டில் தொடங்கி 2027 க்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாடுகள் பேருந்து சேவைகளை மிகவும் திறனுள்ளதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் பயணிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும்.
புதிய மேகக்கணி (cloud) சார்ந்த பேருந்து மேலாண்மை அமைப்பு நிறுவப்படும். கட்டணம் வசூலிக்கும் கருவிகளும் 5G வலையமைப்புகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படும்.
மேலும், மின்சாரம் மற்றும் சமிக்ஞைகளை (signals) சீராக விநியோகிக்க மைய சந்திப்புப் பெட்டிகள் (central junction boxes) பேருந்துகளில் பொருத்தப்படும்.
பயணிகளுக்குச் சிறந்த பேருந்து சேவைகள் கிடைக்கவும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த முன்னேற்றங்கள் உதவும்.
தற்போதைய சேவைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தில் புதிய கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதற்கான அடித்தளமாகவும் இது அமையும் என்று ST Engineering நம்புகிறது.