கண்ணாடி குடுவைகளில் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு!
கடந்த மார்ச் 8 ஆம் தேதி, ஹாங்காங்கில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு வீட்டில் இரண்டு இறந்த குழந்தைகளின் சடலங்கள் கண்ணாடி குடுவைகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 10 அன்று நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட தடயவியல் பரிசோதனையின் படி, குழந்தைகளுக்கு 24 முதல் 30 வாரங்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தம்பதி குழந்தைகளின் பெற்றோரா என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
துன் முன் மாவட்டத்தில் உள்ள அந்த வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒருவர் காலை 10 மணியளவில் இந்த குடுவைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உயிரிழந்தது ஆண் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. திரவத்தால் நிரப்பப்பட்டிருந்த உருளை வடிவக் குடுவைகளின் மேல் துண்டு ஒன்றால் மூடப்பட்ட நிலையில் அந்தக் குழந்தைகளின் உடல்கள் மிதந்து கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.
அந்த திரவம் என்ன, குழந்தைகள் எப்போது, எப்படி இறந்தன என்பதைக் கண்டறிய மேலும் பரிசோதனைகள் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறந்ததற்கான எந்த பதிவும் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் பெற்றோர் என்று சந்தேகிக்கப்படும் 24 வயது ஆணும், 22 வயது பெண்ணும் அந்த வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
கிடங்கு ஊழியரான அந்த ஆண் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் என்றும், பெண் பொதுத் தொடர்புத் துறையில் வேலை செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. விசாரணை முடியும் வரை இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.