தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வேயில் ஐந்து வாகனங்கள் மோதிய விபத்து இருவர் மருத்துவமனையில் அனுமதி!
ஆகஸ்ட் 22 அன்று காலை, தெம்பனீஸ் எக்ஸ்பிரஸ்வேயில் (TPE) செலேட்டார் எக்ஸ்பிரஸ்வேயை (SLE) நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு டிப்பர் லாரி, ஒரு பிரைம் மூவர் மற்றும் மூன்று லாரிகள் உட்பட ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். புங்கோல் சாலை வெளியேறும் வழியைத் தாண்டி, காலை சுமார் 9.40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில், 34 வயது லாரி பயணி ஒருவரும், 33 வயது பிரைம் மூவர் ஓட்டுநர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் நான்கு பேருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்ட போதிலும், அவர்கள் சிகிச்சை பெற விரும்பவில்லை. இந்த விபத்து தொடர்பாக, 33 மற்றும் 36 வயதுடைய இரண்டு லாரி ஓட்டுநர்கள் விசாரணைக்கு உதவுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட டேச்கேம் வீடியோவில், ஐந்து வாகனங்களும் பல வழிகளிலும் மோதி, ஒன்றன் மீது ஒன்று அடுக்கிவைக்கப்பட்டிருப்பது போல் காணப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, 2, 3 மற்றும் 4 ஆகிய வழித்தடங்களைத் தவிர்த்துச் செல்லுமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியது.