யீஷூனில் அடுக்குமாடி வீட்டில் தீ இருவர் மருத்துவமனையில் அனுமதி!
யீஷூன் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக்,11-ல் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் வியாழக்கிழமை (நவ 7) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பாதுகாப்பு கருதி, அங்கு வசித்த சுமார் 50 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் (SCDF) தெரிவித்தனர்.
மதியம் சுமார் 1.20 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த வீட்டின் படுக்கையறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. வீரர்கள் உடனடியாகத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை விரைந்து அணைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே, அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் அவர்களாகவே பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
இருப்பினும், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடனடியாக கேகே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
படுக்கையறையில் இருந்த, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.