சிங்கப்பூரில் SingPass என்றால் என்ன? அதுபற்றி தகவல்கள்.
சிங்கப்பூரில், SingPass என்பது அரசாங்க அங்கீகாரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் அடையாளச் சேவையாகும்.
இணையம் மூலம் பலவகையான சேவைகளைப் பாதுகாப்பாகப் பெற SingPass வழிவகை செய்கிறது. சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர வதிவாளர்கள் மற்றும் சில வெளிநாட்டவர்கள் இந்த சிங்க்பாஸ் மூலம் அரசு மற்றும் தனியார்த் துறை சார்ந்த டிஜிட்டல் சேவைகளை எளிதில் பெறமுடியும்.
340-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் வழங்கும் 1,400-க்கும் அதிகமான அரசு சேவைகளை அணுகுவதற்கு, ஒற்றை உள்நுழைவு அனுமதியாக SingPass செயல்படுகிறது.
இதில் வரி செலுத்துதல், அரசு மானியங்களுக்கு விண்ணப்பித்தல், மத்திய சேமநிதி (CPF) கணக்கு நிலுவைகளைச் சரிபார்த்தல், வீட்டுவசதிக்கு விண்ணப்பித்தல், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் போன்ற பல சேவைகள் அடங்கும். பங்கேற்கும் தனியார் அமைப்புகளின் மின்-சேவைகளுக்கும் (e-services) சிங்க்பாஸ் மூலம் அணுகல் பெறலாம்.
SingPass கணக்கு துவங்க குறைந்தபட்சம் 15 வயது இருக்க வேண்டும். குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவாளர்கள் தங்கள் தேசிய பதிவு அடையாள அட்டை (NRIC) எண்ணையும், வெளிநாட்டவர் தங்கள் வெளிநாட்டு அடையாள எண்ணையும் (FIN) வைத்திருக்க வேண்டும். SingPass பதிவை ஆன்லைனிலோ அல்லது நேரில் SingPass மையங்களிலோ செய்யலாம்.
SingPass பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இது, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், ஆன்லைன் சேவைகளுக்குப் பாதுகாப்பான அணுகலை உறுதி செய்யவும் உதவுகிறது. பயனர்பெயர், கடவுச்சொல் போன்ற அடிப்படை அம்சங்களுடன், SMS மூலம் வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP), OneKey டோக்கன் அல்லது சிங்க்பாஸ் மொபைல் செயலி போன்ற கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன.
2018-ல் அறிமுகப்படுத்தப்பட்ட SingPass மொபைல் செயலி, பயனர்களை தங்கள் Smartphones மூலம் அரசு சேவைகளை அணுக அனுமதிப்பதன் மூலம் SingPassல் வசதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
கைரேகை மற்றும் முகம் அடையாளம் காணும் உயிரியளவு சோதனைகள் போன்றவை செயலியில் இருப்பதால், டோக்கன்கள் அல்லது SMS கடவுச்சொற்கள் தேவை இல்லாமல், எளிதாகவும் பாதுகாப்பாகவும் சேவைகளை அணுக முடியும்.
அரசு மற்றும் தனியார் சேவைகள் மட்டுமல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் பல தேவைகளுக்கான அடையாளச் சரிபார்ப்புக்கும் SingPass பயன்படுகிறது. உதாரணமாக, COVID-19 பெருந்தொற்று காலத்தில், பொது இடங்களில் தொடர்புத் தடமறியும் முயற்சிகளுக்கு உதவும் SafeEntry நுழைவுக்கும் SingPass பயன்படுத்தப்பட்டது.
மொத்தத்தில் சிங்கப்பூரின் டிஜிட்டல் உருமாற்றத்தில் SingPass முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தியாவசிய சேவைகளை நெறிப்படுத்தி, டிஜிட்டல் உலகில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான செயல்பாடுகளின் திறனை அதிகரிக்கிறது.