சிங்கப்பூரில் மனைவியையும் மனைவியின் காதலனை தாக்கியதற்கு 42 வயது நபருக்கு எட்டு வார சிறைத்தண்டனை!

0

சிங்கப்பூரில், தன் மனைவி வேறொரு ஆணுடன் காரில் இருப்பதைக் கண்ட ஆத்திரத்தில், அந்தக் காரின் மீது ஏறி அதை சேதப்படுத்தியதோடு, தனது வேனால் அதை மோதித் தாக்கியதற்காக 42 வயதான நோர்ஃபர்ஹான் முகமது டாலனுக்கு எட்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விவாகரத்து செய்துகொள்ளும் நிலையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. காரைவிட்டு இறங்குமாறு நோர்ஃபர்ஹான் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவர்கள் மறுக்கவே, நோர்ஃபர்ஹான் காரின் பானட்டின் மீது ஏறி அதை தாக்கியதுடன், பின்னால் இருந்து தன் வேனைக் கொண்டு காரை மோதியும் உள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக, நோர்ஃபர்ஹானின் மனைவிக்கு கழுத்து மற்றும் முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு போதைப்பொருள் மேற்பார்வை உத்தரவின் கீழ் இருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நோர்ஃபர்ஹான் மீது ஏற்கனவே அவர் மனைவியை தாக்கிய வழக்கு உட்பட, வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், இனி வன்முறையை நாடாமல் இருக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

நோர்ஃபர்ஹானின் செயல்களின் தீவிரத்தை சுட்டிக்காட்டிய துணை அரசு வழக்கறிஞர், எட்டு முதல் பத்து வாரங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட நோர்ஃபர்ஹான் மீது குற்றவியல் அச்சுறுத்தல் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ஒரு குற்றவியல் வழக்கும் அவருக்கு எதிராக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் சட்டத்தின்படி, குற்றவியல் அச்சுறுத்தலுக்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

Leave A Reply

Your email address will not be published.