மியான்மரில் நிலநடுக்கத்தால் பெரும் சேதம் 63 வயது மூதாட்டி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு!
மியான்மரில் கடந்த 28ஆம் தேதி 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேக்கு அருகே மையம் கொண்டிருந்ததால், நகரத்தின் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
விமான நிலையம், சாலைகள் சேதமடைந்தன, மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக அழிந்தன. நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து போயுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வீடுகளை இழந்த மக்கள், வீதிகளில் தங்கியிருந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாடுகளின் உதவியுடன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் நேபிடாவில் 63 வயது மூதாட்டி ஒருவரை மீட்பு குழுவினர் நான்கு நாட்கள் கழித்து உயிருடன் கண்டுபிடித்து மீட்டனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னும் பல இடங்களுக்கு மீட்பு குழுக்கள் சென்றடையாததால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆதாரம் /others