மூத்த பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபு (வயது 71) காலமானார்!
பிரபல நகைச்சுவை நடிகரும் பன்முகத் திறமை கொண்ட கலைஞருமான மதன் பாபு, தனது 71-வது வயதில் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் உயிர் பிரிந்தது.
சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தனது தனித்துவமான முகபாவனைகள், வசீகரமான புன்னகை மற்றும் இயல்பான நகைச்சுவைக்காக அறியப்பட்டவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இசையமைப்பாளராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் நடிகராக, மிமிக்ரி கலைஞராக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக என பன்முகத் திறமைகளால் ஜொலித்தார். ‘வானமே எல்லை’ திரைப்படத்தில், இயக்குநர் கே. பாலச்சந்தர் அவர்கள்தான் இவருக்கு ‘மதன் பாபு’ என்ற பெயரைச் சூட்டினார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், குறிப்பாக ‘தேவர் மகன்’, ‘சதி லீலாவதி’, ‘தெனாலி’, ‘பிரண்ட்ஸ்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ போன்ற படங்களில் இவரது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படும்.
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.