ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்தில் திடீரென பிரேக் போட்டதால், தாயின் கைகளிலிருந்து நழுவி சாலையில் விழுந்த குழந்தை!
ஸ்ரீவில்லிபுத்தூரில், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் தனியார் பஸ்ஸில் இருந்து ஒரு வயது குழந்தை சாலையில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கைகளில் இருந்த அக்குழந்தை, பஸ் நின்ற வேகத்தில் கையில் இருந்து நழுவி கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் சக பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதன் குமார் என்பவர், தனது சகோதரி மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் இந்தப் பஸ்ஸில் பயணம் செய்துள்ளார். மதன் குமார் தனது இரண்டரை வயது குழந்தையை மடியிலும், அவரது சகோதரி ஒரு வயது குழந்தையை கையிலும் வைத்திருந்துள்ளனர்.
பேருந்து பஸ் சிக்னலை அடைந்தபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில், மதன் குமாரும் அவரது குழந்தையும் பஸ்ஸில்உள்ளேயே விழுந்தனர். ஆனால், அவரது சகோதரியின் கையில் இருந்த குழந்தை, பஸ்ஸின் படிக்கட்டில் விழுந்து, பின்னர் அப்படியே சாலையில் போய் விழுந்தது.
சாலையின் ஓரத்தில் இருந்த முதியவர் ஒருவர் உடனடியாகக் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றினார். இந்த விபத்தில் இரு குழந்தைகளுக்கும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, அவர்கள் வீடு திரும்பினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.