2 வயது குழந்தையை சூட்கேஸில் மறைத்து பஸ்ஸில் பயணம் செய்த பெண் கைது!
நியூசிலாந்தில் ஒரு பஸ் டிரைவர், சூட்கேஸ் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தையைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ் வொங்காரெய் (Whangarei) நகரிலிருந்து ஆக்லாந்து (Auckland) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வழியில் பஸ் நின்றபோது, அந்தப் பெட்டி லேசாக அசைவதைப் டிரைவர் கவனித்திருக்கிறார்.
சந்தேகப்பட்டு அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு சின்னக் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சுமார் ஒரு மணி நேரமாக அந்தக் குழந்தை பெட்டிக்குள் இருந்திருக்கிறது. நல்லவேளையாக, குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்குப் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், பெட்டிக்குள் இருந்ததால் உடம்பு மிகவும் சூடாக இருந்தது.
27 வயதான அந்தப் பெண் மீது, குழந்தையைத் துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பெண் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதியப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.