சிங்கப்பூரில் வேப்பிங் மீதான கடும் சட்டம் முதல் வாரத்தில் 232 பேர் பிடிபட்டனர்.
சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வேப்பிங்கிற்கு எதிரான கடுமையான சட்டங்கள் அமுலுக்கு வந்தன.
முதல் வாரத்திலேயே, வேப் தொடர்பான குற்றங்களுக்காக 232 பேர் அதிகாரிகளிடம் பிடிபட்டனர். இவர்களில் 32 பேர், சமீபத்தில் போதைப்பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ‘எட்டோமிடேட்’ என்ற பொருளைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, மற்றவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், ஆறு மாதங்கள் வரை மறுவாழ்வு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான ‘Kpods’ எனப்படும் போதைப்பொருள் கலந்த வேப் சாதனங்களைச் சிலர் வைத்திருந்ததும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
செப்டம்பர் 6-ஆம் தேதி, 40 வயதான டெரிக் கோர் பூன் சுன் என்ற ஆடவரை போலீசார் ஆங் மோ கியோவில் கைது செய்தனர். அவர் போதைப்பொருள் கலந்த 43 ‘Kpods’-களை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
அவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 8-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், பிரம்படியும் கிடைக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து இவற்றை இறக்குமதி செய்தால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், கடுமையான பிரம்படியும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த, அரசு மற்றும் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு வேப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட “Bin The Vape” (வேப்பை தூக்கி எறியுங்கள்) என்ற பிரச்சாரத்தின் மூலம், பொதுமக்களிடமிருந்து சுமார் 6,000 வேப் சாதனங்கள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
அதே சமயம், இந்தப் பழக்கத்தை கைவிட விரும்புவோர், எந்தவித தண்டனையும் இன்றி ‘QuitVape’ மற்றும் ‘I Quit’ போன்ற திட்டங்கள் மூலம் உதவி பெறலாம்.