மலேசியா சுங்கச்சாவடியில் பயங்கர விபத்து லாரி மோதி ஒரு வயது குழந்தை பரிதாப பலி!

0

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள புக்கிட் காஜாங் சுங்கச்சாவடியில் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை ஒரு சோகமான விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த மூன்று டன் லாரி ஒன்று, பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த கோர விபத்தில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஒரு வாகனத்தின் அடியில் குழந்தை சிக்கியிருப்பதைக் கண்டனர். குழந்தையை மீட்டபோது, அது ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. அதே வாகனத்தில் சிக்கியிருந்த மற்றொரு நபரும், காயமடைந்த மற்ற ஏழு பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக 42 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. லாரியின் பிரேக் செயல்படாததே விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில், லாரி அதிவேகமாக சுங்கச்சாவடிக்குள் நுழைந்து, முன்னால் இருந்த கார்கள் மீது கடுமையாக மோதுவதும், விபத்து நடந்த பகுதி முழுவதும் வாகனங்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதும் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.