குவைத்மங்காப் நகரில் தீ விபத்து 41 தொழிலாளர்கள் உயிரிழப்பு.

0

குவைத் நாட்டின் மங்காப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 41 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் வசித்துவந்த கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, நெருக்கடியான வாழ்க்கை சூழல் காரணமாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சரான சேக் பஹாத் யூசுப் சவுத் அல்-சபா, இந்த விபத்திற்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் அலட்சியம் மற்றும் பேராசையே காரணம் என்று கூறியுள்ளார். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் செய்த தவறுகளே இந்த அசம்பாவிதத்திற்கு வித்திட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், கட்டிடத்தில் அதிகமான தொழிலாளர்கள் நெருக்கடியாக வசித்து வந்ததாக மேஜர் ஜெனரல் ஈத் ரஷீத் ஹமத் தெரிவித்துள்ளார்.

பல தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், பலர் புகை மூட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், அது கடைப்பிடிக்கப்படாததால் இந்த சோகம் நேர்ந்துள்ளது.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, கடுமையான விதிமுறைகள் அவசியம் என்று சேக் பஹாத் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சோக சம்பவம், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மற்றும் தொழில் நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.