சிங்கப்பூரில் கத்தரிக்கோலால் மிரட்டி கொள்ளை – 28 வயது இளைஞர் கைது!

0

சிங்கப்பூரின் கெம்பாங்கான் பகுதியில், ஜாலான் செலாமட்டில் ஒருவரை கத்தரிக்கோலால் மிரட்டி கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 28 வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 3ஆம் தேதி வெளியான செய்திக் குறிப்பின்படி, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து S$5,000 ரொக்கத்தை அந்த நபர் வலுக்கட்டாயமாகப் பறிக்க முயன்றார்.

மே 2 ஆம் தேதி அதிகாலை 4:35 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து செயல்பட்ட பெடோக் காவல் பிரிவு அதிகாரிகள், 16 மணி நேரத்திற்குள் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடமிருந்து S$3,400 ரொக்கமும் மீட்கப்பட்டது.

ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டு, மற்றவருக்கு காயம் விளைவித்த குற்றச்சாட்டுகளை அந்த நபர் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள இருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

கொள்ளைச் சம்பவங்களில் பொதுமக்கள் பதற்றமடையாமல் நிதானமாக இருக்குமாறும், குற்றவாளியின் தோற்றம் மற்றும் அடையாளங்களை கவனித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. வன்முறை குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாகக் கையாள்வோம் என்றும் எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.