ஓட்டுநரின் கவனக் குறைவால் 3 கார்கள் மோதல் – போலீசார் விசாரணை.
மலேசியாவின் ஜோகூர் பாருவில் மார்ச் 31 அன்று சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்ததால் தொடர் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் மொத்தம் மூன்று கார்கள் சேதமடைந்ததோடு, இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஜோகூர் பாருவில் உள்ள தமான் கோத்தா என்ற இடத்தில், ஒரு கார் ஷோரூம் அருகே திங்கட்கிழமை (மார்ச் 31) மதியம் சுமார் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட ஹோண்டா காரை ஓட்டி வந்தவர் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்ததாக போலீஸ் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹோண்டா கார், முதலில் சிக்னலுக்காக காத்து நின்றுகொண்டிருந்த ஒரு BMW கார் மீது மோதியது. அதோடு நிற்காமல், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு கார்கள் மீதும் மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில், ஹோண்டா மற்றும் BMW ஆகிய இரண்டு கார்களிலும் இருந்த பாதுகாப்பு ஏர்பேக்குகள் (Airbags) பலூன் போல உடனடியாக விரிந்துள்ளன.
சிங்கப்பூர் காரை ஓட்டி வந்த 36 வயது ஓட்டுநருக்கு அடிவயிற்றிலும், BMW காரை ஓட்டிய 30 வயது ஓட்டுநருக்கு தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஹோண்டா கார் BMW காரின் வலது பக்கத்தில் வேகமாக மோதுவதும், அதனால் BMW காரின் ஓட்டுநர் காருக்குள்ளேயே சிக்கிக்கொள்வதும் தெரிகிறது.
அவர் சுயநினைவுடன் இருந்தாலும், உடனடியாக அவரால் காரை விட்டு வெளியே வர முடியவில்லை. ஹோண்டா காரின் முன்பகுதி மிக மோசமாக நசுங்கி, அதன் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்துகொண்டிருந்தது. ஹோண்டா காரை ஓட்டியவர் என்ன நடந்தது என்று புரியாமல், சற்று திகைப்புடன் ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் யாரேனும் இருந்தால், விசாரணைக்கு உதவும் வகையில் தங்களிடம் உள்ள தகவல்களைப் பகிருமாறு உள்ளூர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.