சிங்கப்பூரில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு கார் ஓட்டுனர் கைது!
சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதிவிட்டு, அதன் அருகிலிருந்த இருவரை இடிக்கும் அளவிற்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 47 வயதான வின்சென்ட் சீ கோக் விங் என்ற கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி வூட்லண்ட்ஸ் அவென்யூ 12-ல் அவர் இந்த அராஜக செயலைப் புரிந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சியில், சீ முதலில் தனது காரை ரிவர்ஸில் எடுத்து, பின்னர் ஒரு பெண் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை நோக்கி வேகமாக காரை முன்னோக்கிச் செலுத்தியுள்ளார்.
மார்ச் 23 ஆம் தேதி இரவு 10 மணிக்கு சற்று கழித்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வாகன ஓட்டுனர் தனது காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிள் மீது ரிவர்ஸில் மோதிய பிறகு, மோட்டார் சைக்கிளின் மீதேறி வேகமாக காரை முன்னோக்கிச் செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சரியான நேரத்தில் தனது வாகனத்திலிருந்து குதித்து, காரின் மோதலில் இருந்து தப்பித்தார்.
வழக்குப் பதிவு குறித்த தகவலைப் பெற்று மூன்று மணி நேரத்திற்குள், போக்குவரத்துக் காவல் பிரிவு மற்றும் வூட்லண்ட்ஸ் காவல் பிரிவு அதிகாரிகள் இணைந்து, அந்த வாகன ஓட்டுனரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இந்த வழக்கு ஏப்ரல் 22-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காரின் மோதலில் சிக்காமல் குறுகிய இடைவெளியில் தப்பிக்கும் காட்சிகளைக் கொண்ட இந்த சம்பவத்தின் வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.