மலேசியாவில் ஜோகூர் மாநில காவல் நிலைய தாக்குதல்2 காவலர்கள் கொல்லப்பட்டனர், 1 காவலர் படுகாயமடைந்தார்!
மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில், காவல் நிலையத்திற்குள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் புகுந்த நபர் ஒருவர், இரு காவல்துறையினரை கொடூரமாகக் கொலை செய்து மற்றொருவரை படுகாயப்படுத்திய பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம், Jemaah Islamiyah (JI) என்ற தீவிரவாதக் குழுவின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபரின் வீட்டில் இருந்து JI குழுவோடு தொடர்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல், காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகளை திருடும் நோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், தாக்குதலுக்கு சற்று முன்னதாக காவல் நிலையத்திற்கு வந்த இரு மாணவர்கள் கவனத்தை திசை திருப்ப முயன்றார்களா என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமூடி அணிந்திருந்த அந்த நபர், அரிவாளால் ஒரு காவலரை வெட்டி படுகொலை செய்த பிறகு, அவரிடமிருந்து பறித்த துப்பாக்கியால் மற்றொரு காவலரை சுட்டுக் கொன்று, மூன்றாவது காவலரை படுகாயப்படுத்தினார்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்திய நபருக்கு எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்று தேசிய காவல்துறை தலைவர் ரசாருடின் கூறியுள்ளார். மேலும், ஜோகூர் பகுதியில் JI குழுவைச் சேர்ந்த மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இத்தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.