சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளருக்கும் குடியிருப்பாளருக்கும் இடையிலான பிரச்சனைகள் அதிகரிப்பு!

0

சிங்கப்பூரில், வீட்டின் உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் இடையிலான தகராறுகள் அதிகரித்து வருகின்றன.

சிறுசாலை நீதிமன்றங்களில் (Small Claims Tribunals) இது தொடர்பான வழக்குகள் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளன. 2023-ம் ஆண்டில் மட்டும், வாடகை தொடர்பான 1,510க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 62% அதிகமாகும்.

வீட்டு உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் தங்களது சட்டபூர்வ உரிமைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டதாலும், வீட்டு முகவர்களை (housing agents) ஆலோசனைக்கு அதிகம் நாடுவதாலும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்கள்

பாதுகாப்பு வைப்புத் தொகை (security deposit), வீட்டிற்கு ஏற்பட்ட சேதம், ஒப்பந்தத்தை சீக்கிரமே முறித்துக் கொள்வது, வாடகை பாக்கி ஆகியவை பல பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

வீட்டுக்கு ஏற்பட்ட “தேய்மானத்திற்கான” விளக்கத்தில் வீட்டு உரிமையாளருக்கும் குடியிருப்பாளருக்கும் இடையே பெரும்பாலும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் சேதங்களுக்கான பொறுப்பில் இருதரப்புக்கும் மோதல் எழுகிறது.

சேதங்களைச் சரி செய்யும் செலவை வைப்புத் தொகையில் பிடித்தம் செய்ய நினைக்கும் உரிமையாளர்களுக்கும், குறிப்பிட்ட சேதம் இயல்பான தேய்மானம்தான் என்று வாதிடும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே சிக்கல்கள் உருவாகின்றன.

தகராறுகளைத் தவிர்க்க/தீர்க்க வழிகள்

இதுபோன்ற தகராறுகளைத் தவிர்க்க அல்லது தீர்க்க, வல்லுநர்கள் தெளிவான ஆவணங்கள் மற்றும் விரிவான வாடகை ஒப்பந்தங்களை வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள்.

குடியிருப்பாளரின் பொறுப்புகளைத் தெளிவாகக் குறிப்பிடும் விதிமுறைகளைச் சேர்ப்பது தவறான புரிதல்களைத் தடுக்க உதவும். அனுபவம் வாய்ந்த வீட்டு உரிமையாளர்கள், ஒப்பந்தங்களை வரைவு செய்யும்போது சட்ட ஆலோசனையை நாடுவது நல்லது.

மேலும், குடியிருப்பாளரின் அலட்சியத்தால் ஏற்பட்ட சேதங்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க, உரிமையாளரிடம் தெளிவான புகைப்பட ஆதாரங்கள் இருப்பது அவரது வழக்கை வலுவாக்கும்.

Leave A Reply

Your email address will not be published.