$16,400 மதிப்புள்ள தங்கச் சங்கிலி திருட முயன்றவர், கடைக்காரர் மற்றும் பொதுமகன் உதவியால் கைது!
கிளமெண்டியில், கத்தி முனையில் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற 23 வயது இளைஞன் ஒருவன், கடைக்காரர் மற்றும் அவ்வழியே சென்ற ஒருவரின் உதவியால் பிடிபட்டான்.
சுமார் $16,400 மதிப்புள்ள அந்தச் சங்கிலியும், அவனிடமிருந்த மடிக்கத்தியும் மீட்கப்பட்டன. நாளை (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் அவன் மீது வழக்குத் தொடரப்படவுள்ளது.
இந்தத் தங்கச் சங்கிலியை, கடைக்காரர் மின்வணிக தளமான ‘கரோசெல்’ இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டிருந்தார். அதனை வாங்குவதற்காக அந்த இளைஞன் நேரில் சந்தித்தான்.
சங்கிலியைப் பார்ப்பது போல நடித்த அவன், திடீரென அதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். கடைக்காரர் துரத்த, 57 வயது லீ யூ தாய் என்பவரின் உதவியுடன், காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் அருகே அவனை மடக்கிப் பிடித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞனைக் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்ட லீ யூ தாயைப் பாராட்டினர் திருட்டு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அந்தச் சந்தேக நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும், பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்துடன் நடமாடிய குற்றத்திற்காக, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகளும் கிடைக்கும்.